Tuesday, December 29, 2009

பேறு

தாயின் மடியில்
தவழ்ந்து
தந்தையின் தோள் மீது
வளர்ந்து
தாதி ஒருத்தியின் கை
பிடித்து
இல்லறம் களித்தேன்
போதும் - இனி
பரமனே உன்
பாதம் பற்றிடும்
பேறு ஒன்றே
வேண்டும்...

நெருக்கம்


கூடவும் இல்லை
குறையவும் இல்லை
நமக்கிடையேயான நெருக்கம்
நான் காதலை
வெளிப்படுத்திய பின்பும்...

Saturday, December 26, 2009

காதலி

என்னைத் தவிர
எல்லோர்க்கும் தெரிந்தது போல்
உணர்கிறேன் - நீ
என்னை காதலிப்பது

Tuesday, December 15, 2009

முத்தம்

சாயம் பூசிய உதடுகளால்
சிவந்தன என் கன்னங்கள்
வெட்கம்...

Wednesday, November 11, 2009

தூண்டில்

தவறுவதற்காக விடப்பட்டதோ
தவறி விழுந்ததோ
நெற்றியில் சரியும்
கற்றை முடி...

தவறாது அகப்படுகின்றன
தோகைத் தூண்டிலில்
என் கண்கள்...

Monday, October 5, 2009

அமைதி

பிறப்பதற்கு முன் இருந்த
மன நிலை பெற்றேன்...

இறந்த பின் வரும்
அமைதி பெற்றேன்...

Saturday, October 3, 2009

மரணத் தருவாயில்

வியர்வையின் சுவை
அறிகின்றேன்...
என்றன்
ஆறடி மண்
அகழ்கையில்...

Tuesday, September 22, 2009

காதலியல்

எனக்குத் தெரிந்த
புவியியல் இவ்வளவுதான்...
என் வீடு, பள்ளி, கல்லூரி,
மைதானம் மற்றும் அவளின்
காலடித் தடம்...

பௌதீகம்
பொய்க்கிறது...
என் வினைகளுக்கு
எதிர் வினையற்று போகையில்...

Wednesday, August 26, 2009

ஒற்றைப் பார்வை


உன்
ஒற்றைப் பார்வைக்காக‌
பலர் காத்திருக்க ‍‍...
உன்
தரிசனமே வரமென்
தவத்திற்கு...

அலைவு நேரம்

வாழ்நாளின் நொடிகள்
பூரணமடை கின்றன - உன்
காதணியின் ஒவ்வொரு
அலைவிலும்...

Saturday, August 8, 2009

தெரிந்த முகம்


பெயர் தெரியவில்லை
ஊர் தெரியவில்லை
எங்கே பார்த்தோம் என்றும் நினைவில்லை...

முகம் மட்டும் தெரிகிறதென்
அகத்திற்கு...

மறந்தும்
மறக்கவில்லை நான்...
இருந்தும் இல்லையென‌ இயம்பியது
முகம்...

எதுவும் கேட்கவில்லை
முகம் மட்டும் தெரிகிறதென்
அகத்திற்கு...

Thursday, August 6, 2009

இடைத்தேர்தல்

இலவசங்களுக்கு இணைப்பாகும்
ஓட்டு குவியலுக்கிடையே ‍இன்னும்
ஒட்டிக் கிடக்கின்றது நம்
ஜன நாயகத்தின் உயிர்...
உழுபவனின் வயிற்றைப் போல...
நெய்பவனின் ஆடையைப் போல...

இடைத்தேர்தல்
இடை
திரைப்படப் பாடலுக்கிடையிடையே
தோன்றுவது போல‌
நடக்கிறது...

கட்சித் தாவல்கள் நம்
மூதாதையோர்களின் எஞ்சிய‌
மரபணு படுத்தும் பாடு...

முறைப்படி கொள்முதலாகா
நெற்களஞ்சியம்
விற்கப்படுகிறது ரூபாய்க்கு...

ஊருக்கு பொதுவாகவொரு
தொலைக்காட்சி எனும் நிலைமாறி
வீட்டிற்கொன்றென சமத்துவம்
பேசுகிறது...

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கே
மருத்துவம் தேவைப்படுவதால்
மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
தனியாரை நாடிச் செல்லுமாறு*...

ஓட்டுப் பதிவு வீதம் அதிகரிக்க...
ஜன நாயகம் உயிர்த்தெழ...
மக்களோடு மக்களாக‌
எட்டே கோடியில் வீடுகட்டி வாழும்
ஏழைப் பங்காளனுக்கு
மறந்தும் வாக்களிப்பீர்...

* விதிமுறைகளுக்கு உட்பட்டது...

Monday, June 1, 2009

கைக்குட்டை

வியர்வையில் நனைந்த
முகத்தை துடைத்தேன்
முகமெங்கும் முத்தம் - உன்
கைக்குட்டை ...

Sunday, May 31, 2009

தேர்தல்

தூரத்தில் ஓடுகிறான் ஒருவன்...
எதற்காக ...?
தண்ணீர் தேடி ..!
தாயைக் காண ..!
காதலைக் கூற ..!
தன் மழலையைப் பார்க்க ..!
எதற்காக ...
யாரோ வோட்டு கேட்டு
வர்ராங்களாம் ...

நாய் பயம்

முன் நின்று குறைக்கும்
நாய்கள் கண்டு பயமில்லை - பயம்
நடக்கையில் ஆடையின் உரசலும்
நாயின் மூச்சுக் காற்று...
பின் தொடரும் நாய் ...

அமாவாசை

இது என் முதல் ஹைக்கூ !?

அமாவாசை இரவில்
கண் மூடிக் கொள்ள
பயம்...

Thursday, May 28, 2009

என் இதயம்

நீ கண் இமைக்கையில் உன்
கண்ணிமைகளின் இடையில்
சிக்கிக் கொள்ளும் என் இதயம்...
இயக்கப்படுகிறது...
உன் கண்ணசைவுகளால்...

Sunday, May 3, 2009

தமிழினத் தலைவர்

காஞ்சீபுரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் முகத்தையும் மனதையும் கண்டு எழுந்த போலிக் கோபத்தில் எழுதிய சில வரிகள்...

தலைவா எங்களுக்கு
வழிகாட்டுங்கள்...
அனுமன் போல் சென்று
இலங்கையை எ( தி ) ரிக்கிறோம்...
எங்கள் நெருப்பு
தீயவர்களை மட்டும் சுடும்...
நம்பிய தொண்டனை வழிநடத்துவான்
நல்ல தலைவன்...
தமிழினத் தலைவரெனப் படுபவரே
வழி தெரியாமல் விழிக்காதீர்...
என் செய்வதென்று கை விரிக்காதீர்...
உங்களால் முடியும்
எங்கள் இரத்தங்களை கண்டு
கண்ணீர் விடவும்...
நாங்கள் உணவின்றி இறக்கையில்
ஒரு வேலை உணவை துறக்கவும்...
எங்கள் ஓலங்களுக்கு நடுவே
தந்தி கம்பிகளை மீட்டவும்...
மட்டுமே முடியும்... மிஞ்சினால்
மனிதச் சங்கிலியும், கடை அடைப்பும்...
சிங்கத் தமிழர்களின் உயிர்க் காற்று
சிங்கள அரசை அசைக்கிறதோ இல்லையோ
தெரிந்தோ தெரியாமலோ
தமிழக அரசின் நாற்காலியை
ஆட்டம் காணச் செய்து விட்டது...
குடும்பத்தையே தாண்டிவர இயலா
குரலூவியத்தின் அறிக்கை
"தமிழுக்கும் தமிழனுக்கும் ஆபத்தென்றால் நான் போராடுவேன்"
எங்களின் ஆழ்ந்த துக்கத்திலும்
சற்றே நகைப்பைத் தருகிறது... நன்றி
மதுரை மைந்தனின் பாதுகாப்பிற்கு
மத்திய படையை கேளுங்கள் ...
குண்டுகளின் கூடாரம் நடுவே
நாங்கள் சுகமாக உள்ளோம்...
மனைவியார், துணைவியார், மகள், பேரன்,
புத்திரர்கள் மற்றும் சூத்திரர்கள் சுழ
வெற்றிப் போராட்டம் முடித்திரோ..?
"சேது விற்கோ பாலம் அமைப்போம்" என்றான் பாரதி
எங்கள் தளபதியால் தேங்கும் சிறு
சேறுக்கும் சிக்னலுக்கும் பாலமமைக் கவே
நேரம் போதவில்லை... இடையில் சேது எங்கே..?
ஐயா போரை நிறுத்த இராணுவம் வேண்டாம்
இரத்தத்தில் தமிழ்ப் பற்றுரிய
தூதுவரை நிற்பந்திக்கலமே..!
அடுத்த முறை உணவு, மருந்து
கொணரும் கப்பலுடன் நம்பினால்
இரவா வரமருளும் அமிர்தத்தையும்
இறந்தவரை உயிர்ப்பிக்கும் மருந்தையும்
அனுப்பிடுங்கள் ... எங்கள் அனுதாபியே..!

Tuesday, March 3, 2009

நிழல்


நிழல் போல்
நீளும் குறையும்

ஒருபோதும்
அழியாது - உன் மீதான
அன்பு...

மாற்றம்

கூரையின் திறப்பு வழியே
நிலவைப் பிடிக்க
நீளும் கைகள்

நீ நிலவாக மாறினாயோ...!
நிலா நீயாக மாறியதோ...!

ஒன்று மட்டும் உண்மை
நான் நானாக இல்லை...?

Friday, February 6, 2009

புறை

ஒரு மதிய உணவின் போது புறை ஏற, அருகில் அமர்ந்தவர்களுக்கு சில சோற்று பருக்கைகளை பகிர்கையில் (சந்தேகமின்றி எச்சில் பருக்கைதான்) என் சிந்தையிலிருந்து தெறித்த கவிதை.

எனக்கு புறை ஏறும்
போதெல்லாம்
உன்னை நினைக்கிறேன்...

Monday, February 2, 2009

தாகம்

நான் தாகத்தில் தவிக்கையில்

சாக்கடையில் நீர் அருந்தும்

நாய்

அறிமுகம்

நானும் பச்சையப்பனும், கல்லூரியில் படித்தகாலங்களில் இருந்து கவிதைகள் என்ற பெயரில் கொடுமை செய்ய ஆரம்பித்துவிட்டோம் :)

இப்போது அதை இன்னும் கொஞ்சம் தீவிரமாக செய்ய எண்ணியுள்ளோம். ஏற்கனவே என்னுடைய பதிவு தமிழ்மணத்தில் உள்ளது.

கவிதை பற்றிய வரைமுறைகள் ஏதுமின்றி, கன்னா பின்னாவென்று எழுதி அதற்கு கவிதை என்று பெயர் சூட்டும் அந்த கொடுமையை நாங்களும் இனி செய்யக்கூடும்.

உங்கள் மேலான ஆதரவையும், திட்டுகளையும் தெரிவித்து உங்கள் பொன்னான ஓட்டுக்களை எங்களுக்கே போடுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

ஒரு குட்டி கவிதையுடன்:

தெரிந்த இடத்தில் நடந்தாலும்,
நடக்கும்போது தெரிவதில்லை
சினிமா ஷூட்டிங்

கண்ணாடி

அவள் முகம் பார்க்க - என்

கண்கள் ஆடிகளாயின...

பசி Hunger

காம்பென என் கைவிரல்களை சூப்புகையில்
என் கடை நரம்பும் உணர்ந்தன
உன் பசியை - நெரிசலான
ஒரு பேருந்து பிரயாணத்தில்