Friday, August 5, 2011

வெள்ளையனே வெளியேறு Vellaiyane Veliyeru - Quit India


வெள்ளையனே வெளியேறு அந்தகாலம்

வெள்ளையனே முதலீட்டுடன்

உள்ளே வா இந்தகாலம்*


*முதலில் முதலைகளை கவனி

 
வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்து 70 ஆண்டு ஆகிறது,!


மான்சண்டோவே இந்தியாவை விட்டு வெளியேறு! (Quit Mansando!)


பன்னாட்டு நிறுவனப் பிடியில் பாரத விவசாயம் ஏன்?

(வெள்ளையனே வெளியேறு தினத்தன்று (09 ஆகஸ்ட் 2011 ) நாடு தழுவிய இயக்க/செயல்திறன் நாள் மற்றும் உழவர் சுயராஜ்ஜிய வாரம் (09 - 15) ஆகஸ்ட் 2011 )



மான்சாண்டோ என்னும் விவசாயக் கம்பெனியைப் பற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறீர்களா? அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோ, பல்வேறு சூழ்ச்சிகளையும் குறுக்கு யுக்திகளையும் கையாண்டு உலகிலேயே மிகப் பெரிய விதைக் கம்பெனியாக வளர்ந்துள்ளது. இதன் வருட லாபம் சுமார் 22500 கோடி ரூபாய்! கிட்டத்தட்ட 48 நாடுகளின் GDP யை விட இது அதிகமாகும் என்றால் இதன் பலத்தை நீங்களே யூகித்து கொள்ளலாம். உலகம் முழுவதிலும் பல கிரிமினல் குற்றங்களுக்கும் குயுக்திகளுக்கும் பெயர் போனது மன்சாண்டோ: இயற்கை வளங்களை மாசு படுத்துதல், தன உற்பத்தி பொருட்களால் மனிதர்களை ஊனம் மற்றும் மரணம் அடைய செய்தல், அனுமதிகளுக்காக சட்ட அரசாங்க அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், அபாயகரமான 'டயாக்சின் ' போன்ற ரசாயனங்களை தீங்கு விளைவிக்காதவை என்று ஆய்வு அறிக்கைகளை மாற்றி எழுதுதல், அனுமதி அளிக்கும் அரசு பதவிகளைத் தன் நிறுவன ஆட்களால் நிரப்புதல், ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு தன் நிறுவனத்தில் உயர் பதவி அளித்தல், பொய் விளம்பரங்கள் என்று ஏகப்பட்டவை!



தன்னுடைய விதைகளை பேடன்ட் (patent ) செய்துள்ள இந் நிறுவனம் ,அவ்விதைகளை நட்ட விவசாயிகள் அதிலிருந்து விதைகளை சேமித்தால் அது ஒரு கிரிமினல் குற்றம் என்று வழக்கு தொடுத்தும், உழவர்களை சிறைப்படுத்தியும் இருப்பதை நம் இந்திய விவசாயிகள் அறிய வேண்டும் . பல்லாண்டு காலமாய் விதைகளைப் பாதுகாத்த விவசாயிகளே தன் விளைச்சலில் இருந்து விதைகளை சேமிக்க கூடாது என்ற சட்டத்தின் அவலத்தை என்னவென்று சொல்லுவது!



உலகத்தின் அனைத்து உணவும் நம்முடையதாக மட்டுமே இருக்க வேண்டும் (no food shall be grown which we do not own ) என்பதே இந்த நிறுவனத்தின் குறிக்கோளாகக் கூறப்படுகிறது. மானுடம் உள்ள வரை உணவு உற்பத்தியும் இருக்குமாதலால், உலக உணவு முழுவதையும் ஆளுமை செய்வதே இதன் தந்திர ஆசை. பேட்டேன்டுகள் மூலமும், ஒட்டு மற்றும் மரபீனிய (GM ) விதைகள் மூலமும் உணவு உற்பத்தியை முழுமையாக ஆளுமை செய்து, போட்டிக்கு யாருமின்றி, உழவர்கள் நிரந்தரமாய் தன்னிடம் மீண்டும் மீண்டும் விதை வாங்க வைப்பதே இதன் உள்நோக்கம். தனக்கு மிக நட்பான சூழல் உள்ள அமெரிக்காவிலேயே இந்நிறுவனத்தின் மீது anti -trust (ஏகாதிபத்திய எதிர்ப்பு சட்டம்) விசாரணைகள், வழக்குகள் உள்ளன.



இந்தியாவில் மான்சாண்டோ செய்யும் விஷமங்களும், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களும்



மஹிகோ-மான்சாண்டோ நிறுவனம், தன் Bt பருத்தி விதையின் ஏகாதிபத்தியத்தால் அநியாய விலை நிர்ணயம் செய்தது. ஆந்திர மாநில அரசாங்கம் MRTP கமிஷன் , அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் மற்றும் ஒரு புது சட்ட திருத்தமும் இயற்றி இதன் பருத்தி விதை விலையை ஒரு பாக்கெட் 1800 ரூ என்பதை 750 ரூ ஆக குறைக்க வேண்டியிருந்தது.

ஆந்திர மற்றும் குஜராத் மாநில அரசுகளின் மீது மான்சாண்டோ 'விதைகளின் விலையைக் குறைக்க அரசுக்கு உரிமை இல்லை' என்று வழக்கு தொடுத்தது. இதற்கு காங்கிரசின் முக்கிய தலைவர் ஆன அபிஷேக் சங்க்ஹ்வி மான்சாண்டோவின் வழக்கறிஞ்சர் ஆக ஆஜர் ஆனார்!

பல விதை நிறுவனங்களுடன் லைசென்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது மான்சாண்டோ ; இதன் விளைவாக 225 லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட Bt பருத்தியில் 210 லட்சம் ஏக்கர் மான்சாண்டோவின் போல்கார்ட் பருதியாயிற்று. 2002 -2006 வருடங்களில் மான்சாண்டோவின் ராயல்டி வருமானம் மட்டும் 1600 கூடி ரூபாய்!



அமெரிக்காவிலே உணவு பாதுகாப்பு சட்டங்கள் பலவும் மான்சாண்டோ நிறுவனத்தின் வசதிக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டன. இந்த சட்டம் வரையறுக்கும் FDA என்ற அரசு குழுவின் அங்கத்தினர்கள் பலரும் மான்சாண்டோவின் மாஜி வக்கீல்கள், ஆபீசர்கள் ! இதே குயுக்தியுடன் இந்தியாவில் 'இந்திய அமெரிக்க வேளாண்மைக்கான அறிவு முனைப்பு' (US -India Knowledge Initiative for Agriculture ) என்று ஒன்றை ஆரம்பித்து மரபீனிய (genetically modified ) விதைகளுக்குச் சாதகமாக உயிர்ப்பன்மை பாதுகாப்பு சட்டங்களைத் தகர்த்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருகின்றன.

மான்சாண்டோ பல மாநில அரசுகளுடன் (ராஜஸ்தான், ஒரிசா, குஜராத், ஹிமாச்சல் பிரதேஷ், ஜம்மு-காஷ்மீர் ) ரகசியமாய் ஒப்பந்தம் செய்து கொண்டு , தன் மரபீனிய மக்கா சோள விதைகளை மாநில அரசுகள் பல நூறு கோடி ரூபாய்களுக்கு வாங்கி இலவசமாய் விவசாயிகளுக்கு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் தன் மக்கா சோள விதைகளுக்கு ஒரு உடனடி சந்தையை அது தயார் செய்கிறது.



மலட்டு தன்மையை உருவாக்கும் கிளைபோசேட் (Glyphosate) என்னும் களைக்கொல்லி மருந்தை இந்த நிறுவனம் சந்தைப் படுத்தி வருகிறது. இக் களைக்கொல்லிக்கு எதிர்ப்பு சக்தி உள்ள அதன் மரபீனிய விதிகளுக்கு அரசு அனுமதி அளித்தால் இக் களைக்கொல்லியின் உபயோகம் விண்ணளாவ வளரும்.



சமீபத்தில் கர்நாடகத்தில் மரபீனிய மக்கா சோளப் பரிசோதனை வயல்களில், மிகுந்த பாதுகாப்பு அத்து மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.



உணவையும் உழவையும் பன்னாட்டு மையங்கள் ஆளுமை செய்வதை எதிர்ப்போம்



ஊழலும் அதன் தோழனாய் முதலாளித்துவமும் சமீப காலமாய் வெளிப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம் - டெலிகாம், காமன்வெல்த் விளையாட்டுக்கள் போன்ற பல துறைகளில். இதே போல் உணவு மற்றும் விவசாய துறைகளிலும் சட்டங்களும், கட்டுபாடுகளும் திரிக்கப்படுவதும், திணிக்கப்படுவதும் அம்பலமாகிக் கொண்டிருகின்றன. மான்சண்டோவுடன் அரசு போட்ட PPP ஒப்பந்தமும், மரபீனிய பயிர்களுக்கு அனுமதி அளிக்கும் அரசு/நிபுணர் குழுக்கள் இந்நிறுவனத்தினால் மானியம் பெற்ற விஞ்ஞானிகளால் நிரப்பப்படுவதும் இன்னும் பலவும். புதிய விதைச்சட்டத்தில் , பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் மாநில அரசுகளின் கடுமையான வேண்டுகோளையும் மீறி, நம் மத்திய விவசாய அமைச்சர், விதைகளின் விலைக்கோ ,ராயல்ட்டிக்கோ உச்ச வரம்பு விதிக்க மறுத்து விட்டார் - விதைக்கம்பெனிகளின் உத்தரவுக்கு அப்பட்டமாய்த் தலை சாய்த்து!



இந்திய விவசாயம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சந்தை வாய்ப்பாக நம் நாட்டு மற்றும் பன்னாட்டு விவசாய தொழில் நிறுவனங்கள் பார்க்கின்றன. "அமெரிக்க இந்திய விவசாய அறிவு முனைவு" என்னும் குழுவில் பன்னாட்டு மையங்களான Monsanto , Archer -Daniels Midland மற்றும் Walmart நிறுவனங்கள் இடம் பெற்று இருப்பது பெரும் அநியாயமானாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. விதையில் தொடங்கி, உணவு உற்பத்தி, பதப்படுத்துதல் , விற்பனை என்று உணவுத்தொழிலின் அனைத்து அங்கங்களையும் கட்டுப்படுத்துவதே இவர்களின் நோக்கம்.



இவ்வாறு விவசாயத்தை கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்தால் எங்கே கொண்டு விடுமோ என்று நாம் யோசிக்கவே வேண்டாம் - அமெரிக்காவை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். சிறு, மத்திய விவசாயிகள் விவசாயத்திலிருந்து 30 -40 வருடங்களுக்கு முன்பே தள்ளப்பட்டு விட்டனர். அமெரிக்காவின் மொத்த ஜனத் தொகையில் 1 % மட்டுமே விவசாயத்தில் ஈடு பட்டுள்ளனர்! விவசாயகக் குடும்பங்களை ஆதரிக்காமல் உணவுத் தொழிற்சாலைகளை ஆதரிக்க ஆரம்பித்தனர். பெரும் நிறுவனங்களின் வக்கீல்கள் அரசின் திட்ட வரைவோராக உருமாறி தனி விவசாயிகள் விதைகளைச் சேமிப்பதும், பொது ஜனங்கள் உணவுத் தொழிற்சாலைகளை விமர்சிப்பதும் குற்றம் என்றவாறு சட்டங்கள் தீட்டினர். Super market chains எனப்படும் தொடர் விற்பனை அங்காடிகள் , ஆயிரக் கணக்கான ஏக்கர் கொண்ட பெரும் நிறுவனங்களிடம் மட்டுமே கொள்முதல் செய்கின்றன - 50 ஏக்கர் உள்ள விவசாயி கூட தன் விளைச்சலை அங்காடிகளில் விற்பது இயலாது.



இந்த "அமெரிக்க மாதிரியை" பார்த்துப் "பாடம்" கற்றுக்கொள்ளும் நம் இந்திய திட்டம் வரைவோர் , விவசாயத்தை நம்பி வாழும் 60 % மக்களை 10 % ஆகக் குறைக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறிக்கொண்டிருக்கிரர்கள்! மற்றவர் எல்லாம் எங்கு போவது? நம் நகர, கிராமியப் பொருளாதாரம் என்ன ஆவது ?

இந்நிலையில் பெரும் அளவில் விளைநிலங்கள் சில கம்பெனிகளால் வாங்கி சேர்க்கப்படுகின்றன. விவசாயிகள் மட்டுமே கவலைப்படும் நிலைமை அல்ல இது; நுகர்வோராகவும் பாதுகாப்பான, சத்தான, பலவகையான நம் பாரம்பரிய உணவு வகைகள் அழியும் நிலையில் இருக்கின்றன.



இன்றே போராட்டத்தில் சேருங்கள்!



ஒரு தேசத்தவராய், நம் உணவையும் சுதந்திரத்தையும் காக்க வேண்டுமானால், நாம் விளைவிப்பதையும், சாப்பிடுவதையும் நாமே தீர்மானிக்க வேண்டுமானால், நாம் செயல்பட இதுவே நேரம்! வாருங்கள் , சேருங்கள்:



ஆகஸ்ட் 9 - நாடு தழுவிய செயல்திறன் நாள் : " மான்சாண்டோ இந்தியாவை விட்டு வெளியேறு!" என்ற கோஷத்துடன்.

ஆகஸ்ட் 9 -15 : உழவர் சுயராஜ்ய வாரம் : வாழ்வாதாரங்கள் , நிலைத்த வேளாண்மை கோரியும், உழவில் பன்னாட்டு மையங்கள் தலை இடுவதை எதிர்த்தும்.
Source - Yuva

No comments:

Post a Comment